வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி தி.மு.க.வினர் சாலைமறியல் நாகையில் பரபரப்பு


வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி தி.மு.க.வினர் சாலைமறியல் நாகையில் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 2 Jan 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள 11 மையங்களில் எண்ணப்பட்டன. அப்போது 21 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. அதேபோல் 214 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 12 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.

நாகை தெத்தியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன.

பெட்டியை தேடும் பணி

அதில் நாகை ஊராட்சி ஒன்றியம் தெத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தமயேந்தி, அ.தி.மு.க. சார்பில் ராஜஸ்ரீ போட்டியிட்டனர். இந்த பகுதியில் பதிவான 1,806 வாக்குகள் 3 வாக்குப்பெட்டிகளில் இருந்தது. நேற்று வாக்கு எண்ணும் போது 2 பெட்டிகளில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டதாக கூறப்படுகிறது. எஞ்சியுள்ள 1-வது பெட்டி குறித்து தமயேந்தியின் முகவர்கள் தேர்தல் அலுவலர்களிடம் கேட்டனர். உடனே அந்த பெட்டியை தேடும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து 1 மணி நேரத்திற்கு பின்னர் அந்த பெட்டியில் இருந்த வாக்குகள் வேறு ஒரு அறையில் வைத்து ஏற்கனவே எண்ணப்பட்டு விட்டது என அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தெத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜஸ்ரீ 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்து விட்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து வேட்பாளர் தமயேந்தி மற்றும் அவர்களது முகவர்கள் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு 10 வாக்குகள் வித்தியாசம் இருந்தால் மட்டுமே மீண்டும் எண்ணப்படும். 32 வாக்குகள் வித்தியாசமாக இருப்பதால் மீண்டும் எண்ணமுடியாது என்று தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து விட்டதாக கூறி தமயேந்தி மற்றும் தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story