கோவில்பட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
கோவில்பட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 1,126 பதவிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 1,275 பதவிகளுக்கும் என மொத்தம் 2,401 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த யூனியனுக்கான வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டது. பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளையும் தனித்தனியாக பிரித்து, 50 எண்ணிக்கையில் கட்டினர். தொடர்ந்து 4 பதவிகளுக்குமான வாக்குச்சீட்டுகளையும் அந்தந்த வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு சென்று எண்ணும் பணி நடந்தது.
ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர் பதவியிலும் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்ட பின்னரே அடுத்த பஞ்சாயத்துக்கான வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. இதேபோன்று 10 பஞ்சாயத்து வார்டுகள் வீதம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே அடுத்த வார்டுகளின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிட்டவர்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரும் இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் முகவர்களை வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியேற்றியதாக புகார்கள் எழுந்தன.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஓட்டப்பிடாரம் யூனியனுக்கான வாக்குகள் எண்ணப்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.
கோவில்பட்டி யூனியனுக்கான வாக்கு எண்ணிக்கை, கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியிலும், கயத்தாறு யூனியனுக்கான வாக்கு எண்ணிக்கை, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியிலும் நடந்தது. கோவில்பட்டியில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 12 யூனியன்களில் பதிவான வாக்குகள் அந்தந்த யூனியன்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் சுற்றுவாரியாகவும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணும் பணிகள் இரவு வரையிலும் அல்லது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரையிலும்கூட தொடர வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் நிதானமாக வாக்கு எண்ணிக்கையை நடத்துகின்றனர். எந்தவிதமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றார்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார்கள் மணிகண்டன், பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story