வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. முகவர்கள் இடையே வாக்குவாதம்


வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. முகவர்கள் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 2 Jan 2020 10:45 PM GMT (Updated: 2020-01-03T00:50:40+05:30)

மன்னார்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. முகவர்கள் இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றிய பகுதியில் பதிவான வாக்குகள் நேற்று மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்பட்டன. மூவாநல்லூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த பிச்சமுத்து 471 வாக்குகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வம் 458 வாக்குகளும் பெற்றனர்.

இதில் 57 வாக்குகள் சந்தேகத்துக்கு உரியவையாக அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வத்தை விட தி.மு.க.வை சேர்ந்த பிச்சமுத்து 13 வாக்குகள் கூடுதலாக பெற்றநிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த முகவர்கள் மறு வாக்கு எண்ணிக்கை கோரினர். இதற்கு தி.மு.க. முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. முகவர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கை மனு

இதனிடையே அ.தி.மு.க.வினர் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் அதிகாரி ஞானத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதை ஏற்ற தேர்தல் அதிகாரி சந்தேகத்துக்குரியதாக அறிவிக்கப்பட்ட 57 வாக்குகளை மட்டும் மறு எண்ணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல மேலவாசல் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த திராவிடமணி 807 வாக்குகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் 795 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்தார். இதிலும் சந்தேகத்துக்குரியதாக கருதப்பட்ட 57 வாக்குகளை மட்டும் மறு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கூறினார். மறு எண்ணிக்கை கோரியதால் 2 ஊராட்சிகளுக்கும் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story