தெருநாய்கள் துரத்தி வந்தபோது, பள்ளத்தில் தவறி விழுந்து கடமான் படுகாயம் - வனத்துறையினர் மீட்டனர்
தெருநாய்கள் துரத்தி வந்தபோது, பள்ளத்தில் தவறி விழுந்து கடமான் படுகாயம் அடைந்தது. அதனை வனத்துறையினர் மீட்டனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ளது குந்தலாடி. இங்கு குடியிருப்புகளை சுற்றி தேயிலை தோட்டங்களும், அதனை சுற்றி அடர்ந்த வனப்பகுதியும் இருக்கிறது. அங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் குந்தலாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கடமான் ஒன்று, அங்குள்ள ஓர்கடவு பகுதிக்குள் புகுந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென கடமானை துரத்தின.
இதனால் அவைகளிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள வடிவேல் என்பவரது தேயிலை தோட்டத்துக்குள் கடமான் புகுந்தது. அப்போது அங்கிருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தது. இதனால் கடமான் படுகாயம் அடைந்தது. இதை கண்ட தோட்ட தொழிலாளர்கள் பிதிர்காடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வலை விரித்து கடமானை பிடித்தனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட கடமானை வாகனத்தில் ஏற்றி பிதிர்காடு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் நந்தினி தலைமையிலான குழுவினர் படுகாயம் அடைந்த கடமானுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வனப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். குடியிருப்பு பகுதிகளில் மான்கள் சுற்றித்திரிவதை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மான்களை பிடித்து கொன்று சமைத்து உண்டாலோ அல்லது துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story