திருச்செந்தூர் அருகே சோகம்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் சாவு
திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீரென்று உயிரிழந்தார்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 75). இவர் தபால் நிலைய அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. திருச்செந்தூர் யூனியன் முன்னாள் துணை தலைவரான பேச்சியம்மாள், தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பேச்சியம்மாள் போட்டியிட்டார். அங்கு பேச்சியம்மாள் உள்பட 11 பேர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதையொட்டி பேச்சியம்மாள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அங்கு கடந்த 27-ந் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்த பேச்சியம்மாளுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து நேற்று மாலையில் நடுநாலுமூலைக்கிணறில் பேச்சியம்மாளின் உடல் அடக்கம் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், அதற்கு முன்தினம் இரவில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story