சேலம் ஒன்றியத்தில் காலை உணவு வழங்க தாமதம்: வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம்


சேலம் ஒன்றியத்தில் காலை உணவு வழங்க தாமதம்: வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:00 AM IST (Updated: 3 Jan 2020 1:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஒன்றியத்தில் காலை உணவு வழங்க தாமதமானதால் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ஆசிரியை உள்பட 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் இருகட்டங்களாக நடந்தது. இதில் 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 166 பேரும், 288 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 1,339 பேரும், 385 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1,639 பேரும், 3 ஆயிரத்து 597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 10 ஆயிரத்து 779 பேரும் களம் கண்டனர். மொத்தம் 4 ஆயிரத்து 299 பதவிகளுக்கு 13 ஆயிரத்து 923 பேர் களம் கண்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சேலம் மாவட்டத்தில் 20 மையங்களில் நேற்று எண்ணப்பட்டன.

இதில் சேலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை சித்தனூரில் உள்ள காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன.

இதற்கான மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம ஊராட்சிமன்ற தலைவர்கள், கிராம வார்டு உறுப்பினர்கள் ஆகியவற்றுக்கு பதிவான வாக்குகள் 4 அறைகளில் வைத்து எண்ணப்பட்டன.

இந்த பணிகளில் 250-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் காலை 5.30 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து விட்டனர். ஆனால் காலை 10 மணி ஆகியும் ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

உணவு வழங்க கால தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணும் ஊழியர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து காலை 10.30 மணிக்கு ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

முன்னதாக உணவு வழங்க கால தாமதம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் ஆசிரியை உள்பட 3 பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தலைவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் மாருதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.காலை 10 மணி வரை தொடர்ந்து ஓட்டுச்சீட்டுகள் பிரிக்கும் பணியும், தபால் ஓட்டுகள் எண்ணும் பணியும் நடைபெற்றது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பலருக்கும் காலை உணவு வழங்கப்படவில்லை என்று கூறி, அவர்கள் வாக்கு எண்ணும் பணியை நிறுத்திவிட்டு அங்குள்ள வளாகத்தில் சோர்வுடன் அமர்ந்து இருந்தனர்.

இதையடுத்து அங்கு ஓட்டு எண்ணும் பணி தாமதம் ஆனது. இது குறித்த தகவல் கிடைத்ததும், தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்கு எண்ணும் பணியை நிறுத்திய பணியாளர்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு ஓட்டு எண்ணும் பணி நடந்தது.

இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்ட போது, ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் காலை 6 மணிக்கே அழைக்கப்பட்டு இருந்தனர். எனவே 8 மணிக்கு அவர்களுக்கு உணவு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்திருந்த சில அரசியல் கட்சிகளின் முகவர்கள் அந்த உணவை சாப்பிட்டு விட்டதால், பணியாளர்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றார்.

இந்த சம்பவம் காரணமாக ஓட்டு எண்ணும் மையத்தில் காலை 10 மணி வரை பரபரப்பு நிலவியது. அதன்பிறகு ஓட்டு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story