மத்திய, மாநில அரசுகளின், மக்கள் விரோத நடவடிக்கைகளால் தி.மு.க.வுக்கு கணிசமான வெற்றி - முன்னாள் அமைச்சர் பேட்டி


மத்திய, மாநில அரசுகளின், மக்கள் விரோத நடவடிக்கைகளால் தி.மு.க.வுக்கு கணிசமான வெற்றி - முன்னாள் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2020 3:45 AM IST (Updated: 3 Jan 2020 10:18 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசு களின் மக்கள் விரோத நடவடிக்கை களால் தி.மு.க.வுக்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க. சார்பில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஊட்டி தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பொங்கலூர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால் பொதுமக்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளார்கள். விலைவாசி உயர்வு, தொழிற்சாலைகள் மூடல், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. விதிப்பு, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியை தவிர, வேறெங்கும் செல்வது இல்லை. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு 3 ஆண்டுகளாக வழங்க வேண்டிய ரூ.7 ஆயிரத்து 500 கோடி வழங்கவில்லை.

தற்போது மு.க.ஸ்டாலின் முயற்சியால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் மத்திய அரசின் நிதி கிடைக்கப்பெற உள்ளது. இதனால் பல நலத்திட்டங்களை கிராமப்புறங்களில் செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், திராவிடமணி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story