திருவள்ளூரில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் மறியல்


திருவள்ளூரில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:00 PM GMT (Updated: 3 Jan 2020 5:47 PM GMT)

திருவள்ளூரில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு மசூதி தெருவில் பெரிய பள்ளி மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியானது திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மசூதிகளின் தலைமை மசூதியாக திகழ்கிறது. மேலும் இந்த மசூதிக்கு செல்லும் சாலையின் ஓரமுள்ள கழிவுநீர் கால்வாய் செல்ல முறையான வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் அந்த கழிவுநீரில் நடந்து அவதிப்பட்டவாறு சென்று வருகின்றனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி புதிய சாலை அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அவர்கள் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அந்த சாலையில் கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே தேங்கி பொதுமக்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதை கண்ட அந்த வழியாக வந்த 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு கழிவுநீரை அகற்றாததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் இங்கு கழிவுநீர் கால்வாயை சீரமைத்து சாலையை அமைத்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் ¼ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story