தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 4 Jan 2020 3:45 AM IST (Updated: 4 Jan 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி(வயது 55). இவர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவுடைநம்பியை மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் அறிவுடைநம்பி உடலை பார்த்தார். பின்னர் அறிவுடைநம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story