குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு : முஸ்லிம்கள் மனிதசங்கிலி போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு : முஸ்லிம்கள் மனிதசங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2020 4:30 AM IST (Updated: 4 Jan 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் முஸ்லிம்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்ககூடாது என்று கூறி எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு முறையை அமல்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி கோவையில் கையெழுத்து இயக்கம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோவை நவாப் ஹக்கீம் சாலை (மரக்கடை) தக்னி அஹ்லே சுன்ன வல் ஜமா அத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் கோவை என்.எச். சாலையில் நேற்று நடந்தது. இதற்கு அன்வர் பாஷா தலைமை தாங்கினார். அப்துல் பாரி, முகமது அலி, செய்தி தொடர்பாளர் அயூப்கான், ஜமேஷா அகமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உக்கடம் என்.எச். சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு முஸ்லிம்கள் கைகோர்த்து மனிதசங்கிலியாக நின்றனர். அப்போது அவர்கள், 250 மீட்டர் நீள தேசிய கொடியை பிடித்திருந்தனர். இந்த போராட்டத்தில் தாருஸ்சலாம் சுன்னத் ஜமாத், அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித், கேரளா முஸ்லிம் ஜமாத், மஸ்ஜிதுல் ஹீதா சுன்னத் ஜமாத், உள்பட பல்வேறு ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தர் ஜமாத் பள்ளி வாசல் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு பள்ளிவாசல் தலைவர் சனாவாஸ் தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் அகமது, செயலாளர் ரஷீது, மத்திய பகுதி தலைவர் இப்ராகிம் அமீது, சிராஜூதீன், திப்புசுல்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள், அந்த பகுதிகளில் நடந்து சென்ற பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

இதுகுறித்து கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் கூறுகையில், தமி ழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Next Story