ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி, 4 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி: கிராம மக்களுடன் வேட்பாளர் சாலை மறியல்
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 4 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர், கிராம மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ரோட்டில் படுத்து உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடக்கு வெள்ளூர். இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த மலர்விழி வேல்முருகன், ஜெயராணி கணேசன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியில் பதிவான ஓட்டுகள், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. தேர்தல் முடிவு நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. இதில் மலர்விழி வேல்முருகன் 1,898 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். ஜெயராணி கணேசன் 1,894 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். 4 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த ஜெயராணி கணேசன், ஓட்டு எண்ணிக்கையில் திருப்தி இல்லை எனவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். மேலும் இது தொடர்பாக மனு எழுதி கொடுத்தார். ஆனால் அந்த மனுவை தேர்தல் அதிகாரிகள் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயராணி கணேசன் நேற்று காலை 11 மணிக்கு வடக்கு வெள்ளூர் கிராம மக்களுடன் சேர்ந்து மந்தாரக்குப்பம்-நெய்வேலி டவுன்ஷிப் சாலைக்கு வந்தார். பின்னர் அங்கு அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ரோட்டில் படுத்து உருண்டு கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் தாசில்தார் கவியரசு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றனர்.
அதற்கு தாசில்தார் கவியரசு, இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story