அவினாசி அருகே, கார்கள் மோதல்; 2 பேர் பலி - 2 பேருக்கு தீவிர சிகிச்சை


அவினாசி அருகே, கார்கள் மோதல்; 2 பேர் பலி - 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 Jan 2020 11:15 PM GMT (Updated: 3 Jan 2020 9:04 PM GMT)

அவினாசி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசி, 

கோவையை அடுத்த இடிகரையை சேர்ந்த பிரபாகரனின் மகன் யாதேவ் (வயது 16). மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமாரின் மகன் ரிஷிவந்த்(19). இவர்கள் இருவரும் சேலத்திலிருந்து கோவையை நோக்கி நேற்று முன்தினம் இரவு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ரிஷிவந்த் ஓட்டினார்.

அதேபோல் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் ராஜசீலன் (39) மற்றும் கடலூரை சேர்ந்த நடராஜன் மகன் லட்சுமணன் (39) ஆகிய இருவரும் கோவையிலிருந்து சேலத்தை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை லட்சுமணன் ஓட்டினார்.

இந்த நிலையில் சேலத்திலிருந்து வந்த கார் அவினாசியை அடுத்த தெக்கலூர் மேம்பாலம் பைபாஸ் ரோட்டில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலை மைய தடுப்பை தாண்டி எதிரே லட்சுமணன் ஓட்டி வந்த கார் மீது மோதியது.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 2 கார்களும் அப்பளம் போல நொறுங்கின. அதற்குள் இருந்தவர்கள் அலறினார்கள். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் யாதேவ், லட்சுமணன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ரிஷிவந்த், ராஜசீலன் ஆகிய 2 பேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story