கோபி அருகே, கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கோபி அருகே, கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2020 5:00 AM IST (Updated: 4 Jan 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே கணவன்-மனைவி, இருவரும் ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடத்தூர், 

கோபி அருகே உள்ள கூகலூர் தண்ணீர்பந்தல்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக கிளை பணி மனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மகேஸ்வரி (35). அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

கார்த்திகேயனின் பக்கத்து வீட்டில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அங்கு வேலை பார்ப்பவர்கள், கார்த்திகேயனின் வீட்டு அருகே சென்றார்கள். அப்போது ஜன்னல் திறந்து கிடந்தது.

அந்த ஜன்னல் வழியாக தொழிலாளர்கள் பார்த்தபோது, வீட்டுக்குள் கார்த்திகேயன் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவது தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் துப்பட்டாவால் மகேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. உடனே இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பாிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

குழந்தைகள் இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, உண்மையிலேயே இவர்கள் தற்கொலைதான் செய்துகொண்டார்களா? என்று கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியது தண்ணீர்பந்தல்புதூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story