ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: அரசு பெண் ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: அரசு பெண் ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jan 2020 4:15 AM IST (Updated: 4 Jan 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் அரசு பெண் ஊழியர் வீட்டில் 35 பவுன் நகையை பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு, 

ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி தமிழ்மணி செல்வி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. தமிழ்மணி செல்வி ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள ஆவின் ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவராஜ் இறந்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு தமிழ்மணி செல்வி வீட்டை பூட்டிவிட்டு தனது மகளுடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து மதியம் அவர்கள் வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தமிழ்மணி செல்வி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 35 பவுன் நகையும், வெள்ளி பொருட்களும், ரூ.25 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

தமிழ்மணி செல்வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் மொத்தம் 11 வீடுகள் உள்ளன. எனவே அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அந்த கேமராக்கள் கடந்த சில நாட்களாக செயல்படாமல் உள்ளது. எனவே அருகில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story