ஆத்தூர் அருகே, லாரி-கார் மோதல்: நகை வியாபாரி உள்பட 3 பேர் பலி


ஆத்தூர் அருகே, லாரி-கார் மோதல்: நகை வியாபாரி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2020 4:30 AM IST (Updated: 5 Jan 2020 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் நகை வியாபாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.

சேலம்,

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 48). இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கவரிங் நகைகள் ஆர்டர் எடுத்து தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

நகை வியாபாரியான இவரும், இவருடைய மேலாளரான கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த வரதராஜனும் (41) கடந்த 2-ந் தேதி இரவு காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். காரை கோவை மதுக்கரையை சேர்ந்த ரமேஷ் (36) என்பவர் ஓட்டி சென்றார்.

சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நகைகளை ஆர்டர் செய்துவிட்டு காரில் கோவைக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆத்தூர் தென்னங்குடி பாளையம் புறவழிச்சாலையில் கார் சென்றது.

லாரி- கார் மோதல்

அப்போது புறவழிச்சாலை பாலத்தின் அருகே சேலத்தில் இருந்து சென்னை நோக்கி கூரியர் பார்சல் லோடு ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி எதிரே வந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கார் மீது அந்த கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த டிரைவர் ரமேஷ் அதே இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம், வரதராஜ் ஆகிய இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

மோதிய வேகத்தில் கன்டெய்னர் லாரி புறவழிச்சாலையில் வலது பக்கம் சுமார் 15 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story