கோத்தகிரி அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாயே கொன்று புதைத்தது அம்பலம்
கோத்தகிரி அருகே, பச்சிளம் ஆண் குழந்தை புதைக்கப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை பெற்ற தாயே தரையில் அடித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை குண்டுபெட்டு காலனியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிக்க கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலாளர்கள் சென்றனர். அப்போது தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதியில் மண்ணில் பாதி மூடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் கை, காலின் பாகங்கள் வெளியே தெரிந்தன. இதனை கவனித்த அவர்கள் இதுபற்றி உடனடியாக கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் குழி தோண்டி பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து குழந்தையின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் இறந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை எனவும், அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தகாத உறவினால் குழந்தை பிறந்ததால் உயிருடன் புதைக்கப்பட்டதா, புதைத்து விட்டு சென்றது யார், வெளியூர் நபர்கள் யாராவது வந்து குழந்தையை புதைத்து விட்டு சென்றார்களா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், கெட்டிக்கம்பை, குண்டுப்பெட்டு காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனையில் பணி புரியும் அலுவலர்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆகியோரிடம் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் குண்டுப்பெட்டு காலனியை சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் வலுத்தது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் பெண் தகாத உறவின் காரணமாக குழந்தை பிறந்தது. அதனால்தான் அந்த ஆண் குழந்தையை தரையில் அடித்துக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் அருகிலிருந்த தேயிலை தோட்டத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த பெண், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது பெயர் முத்துலட்சுமி (வயது 39). சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி குண்டுப்பெட்டு காலனியை சேர்ந்த திருச்செல்வம் என்பவரை திருமணம் செய்து கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனியில் குடியிருந்து வருகிறேன். எங்களுக்கு 10 மற்றும் 9 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2½ ஆண்டுகளுக்குமுன் திருச்செல்வம் இறந்து விட்டார். இதனால் நான் மீண்டும் குண்டுபெட்டு காலனிக்கு சென்றுவிட்டேன். கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்த எனக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் நான் அவருடன் நெருங்கி பழகி வந்ததோடு, அடிக்கடி உல்லாசம் இருந்தோம். இதன்காரணமாக நான் கர்ப்பமானேன். நான் கர்ப்பமாக இருந்ததை வேறு யாருக்கும் தெரியாத வகையில் நடந்து கொண்டேன். இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி காலை 5 மணிக்கு எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தனக்கு குழந்தை பிறந்துள்ளது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய நான் பெற்ற குழந்தை என்று பாராமல் குழந்தையை கொல்வதற்காக முடிவு செய்தேன். அதன்பின்னர் குழந்தையின் 2 கால்களையம் பிடித்து தலைகீழாக தரையில் ஓங்கி அடித்தேன். அப்போது குழந்தை வலி தாங்காமல் அழுததை யடுத்து, குழந்தையின் அழுகை சத்தம் வெளியே கேட்டு விடும் என்பதால் கழுத்தை நெரித்து கொன்றேன்.
பின்னர் இறந்த குழந்தையை ஒரு பையில் போட்டு எடுத்துகொண்டு, தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்று அங்கு குழி தோண்டி புதைத்தேன். இதைத்தொடர்ந்து ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.
மேலும், தினமும் குழந்தையை புதைத்த இடத்திற்கு சென்று யாரேனும் பார்த்துள்ளனரா? என சோதனை செய்து வந்தேன். இந்தநிலையில் குழந்தையை புதைத்த இடத்தில் நாய்கள், காட்டுப்பன்றிகள் தோண்டியதால் குழந்தையின் கை, கால்கள் வெளியே தெரிந்தது. இதனால் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள். மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு முத்துலட்சுமி வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பெற்ற குழந்தையை அடித்துக்கொன்று புதைத்த முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத் தனர்.
பிரசவித்த பச்சிளம் ஆண் குழந்தையை அதன் தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோத்தகிரி குண்டுபெட்டு காலனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story