அ.தி.மு.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக போட்டியிட்ட பெண் வெற்றி
போளூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வில் சீட் மறுக்கப்பட்ட பெண் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க., அ.தி.மு.க.சமநிலையில் உள்ளதால் தலைவர் பதவிக்கு இவர் ஆதரிப்பவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போளூர்,
போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் பி.என்.ஆறுமுகம். இவர் அ.தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதல் உறுப்பினராக உள்ள இவர் பெரியகரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், போளூர் தொடக்க கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் 18-வது வா£டில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் தர மறுக்கப்பட்டது.
இதனால் ஆறுமுகமும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்தனர். எனினும் மனம் தளராத ஆறுமுகம், இந்த தேர்தலில் தனது மனைவி மிஷ்ஷியம்மானை சுயேச்சையாக தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட வைத்தார். இதில் மிஷ்ஷியம்மா 597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் விஜயலட்சுமி 2-ம் இடத்திற்கும், அ.தி.மு.க.வேட்பாளர் தேவன் 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் போளூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணி 10 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 10 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பெற்று உள்ளனர். 13-வது வார்டில் பாக்கியலட்சுமி, 18-வது வார்டில் மிஸ்ஸியம்மாளும் சுயேட்சைகளாக வெற்றி பெற்றனர். 22-வது ஒன்றிய குழு உறுப்பினர்களில் 2 சுயேட்சைகளில் வாக்குகள் ஒன்றிய குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில் மிக முக்கியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க.-, தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போளூர் வட்டத்தில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story