உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்க வேண்டும் - கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்க வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 33 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 340 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 858 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 6 ஆயிரத்து 199 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் நாளை (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணிக்கு பதவிப் பிரமானம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சித் தலைவர்கள் முதலில் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் அவர்களாகவே பதவியேற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வார்டு வாரியாக கிராம ஊராட்சித் தலைவர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் அவர்களாகவே பதவியெற்று கொள்ள வேண்டும்.
அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்க வேண்டும். மூத்த உறுப்பினர் முதலில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக அவரக பதவியேற்க வேண்டும். பின்னர் மற்ற உறுப்பினர்கள், பதவியேற்றுக்கொண்ட மூத்த உறுப்பினர் முன்னிலையில் அவர்களாகவே பதவியேற்றுக்கொள்ள வேண்டும்.
இதேபோல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பதவியேற்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மூத்த உறுப்பினர் முதலில் பதவியேற்க வேண்டும். அதன்பின் அவரது முன்னிலையில் மற்ற உறுப்பினர்கள் அவர்களாகவே பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.
அதன்பின் பதவியேற்பு குறித்த நடவடிக்கையினை அதாவது பதவியேற்பு உறுதி மொழி, உறுதியுரை செய்து கொண்டமைக்கான விவரங்களை ஊராட்சி கூட்ட நடவடிக்கை புத்தகத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story