குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு: கோலாரில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - தடையை மீறி சென்றதால் நடவடிக்கை


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு: கோலாரில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - தடையை மீறி சென்றதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2020 5:44 AM IST (Updated: 5 Jan 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கோலாரில் நடந்த ஊர்வலத்தில் போலீசார் தடியடி நடத்தினர். தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கோலார் தங்கவயல்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர் பொதுமக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அத்துடன் ஆதரவாக பிரமாண்ட தேசிய கொடியுடன் ஊர்வலம், போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோலார் டவுனில் பா.ஜனதாவினர் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலையில் போராட்டத்திற்காக கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, மாலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளம், பா.ஜனதாவினர் 100-க்கும் மேற்பட்ட கார்களில் தேசிய கொடி மற்றும் இந்து அமைப்புகளின் கொடிகளைக் கட்டிக்கொண்டு கோலார் டவுனுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கோலார் தொகுதி எம்.பி. முனிசாமி தலைமையில் கோலார் டவுனில் உள்ள பங்காருபேட்டை சர்க்கிள் பகுதியில் குவிந்தனர். இதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு பங்காருபேட்டை சர்க்கிள் பகுதியில் இருந்து எஸ்.என்.ஆர். ஆஸ்பத்திரி வழியாக எம்.ஜி. ரோடு வரை ஊர்வலமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் கோலார் டவுனில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மணிக்கூண்டு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு அதன்படி ஊர்வலம் நடத்தினர்.

இதுபற்றி அறிந்த போலீசார் போராட்டக்காரர்களை எஸ்.என்.ஆர். ஆஸ்பத்திரி முன்பு இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரின் இரும்பு தடுப்பு வேலிகளை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி ஆகியோர் அங்கிருந்து கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதன்காரணமாக அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. தடியடியின்போது போராட்டக்காரர்கள் தேசிய கொடிகளையும், இந்து அமைப்புகளின் கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.

அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சிப்பதை அறிந்த போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து சிதறி ஓடி கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

இதில் ஏராளமான தொண்டர்கள் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மந்திரிகள் அசோக், நாகேஷ், முனிசாமி எம்.பி., நாராயணசாமி எம்.எல்.சி, முன்னாள் எம்.எல்.ஏ. சம்பங்கி, கோலார் தங்கவயல் நகர பா.ஜனதா தலைவர் கமலநாதன் ஆகியோருடன் இருந்து கொண்டனர். மேலும் கோலார் தங்கவயல் பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் கோலார் டவுனில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த தடியடி சம்பவத்தில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசார் 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் மாலை 4 மணியளவில் கோலார் டவுன் எம்.ஜி. ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மந்திரிகள் அசோக், நாகேஷ், முனிசாமி எம்.பி., நாராயணசாமி எம்.எல்.சி., முன்னாள் எம்.எல்.ஏ. சம்பங்கி, கோலார் தங்கவயல் நகர பா.ஜனதா தலைவர் கமலநாதன் ஆகியோர் தோன்றி போராட்டக்காரர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் கண்டிப்பாக மணிக்கூண்டு வரை ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தலைவர்களின் பேச்சால் சமாதானம் அடைந்த பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இருப்பினும் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story