வெளியூர் செல்வதை நோட்டமிட்டு, ஆசிரியர் வீட்டில் அடுத்தடுத்து திருடிய வாலிபர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்


வெளியூர் செல்வதை நோட்டமிட்டு, ஆசிரியர் வீட்டில் அடுத்தடுத்து திருடிய வாலிபர் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
x
தினத்தந்தி 6 Jan 2020 3:30 AM IST (Updated: 5 Jan 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே, ஆசிரியர் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு அவரது வீட்டில் அடுத்தடுத்து திருடிய பக்கத்து வீட்டு வாலிபர் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு 3-வது வார்டில் குடியிருப்பவர் சையதுஅபுதாகீர். இவர் தேனி மாவட்டம் கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடுபோயிருந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்யவில்லை. அதன் பின்பு கடந்த மாதம் இதே போல் வீட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போனது.

இதனால் உ‌ஷாரான சையதுஅபுதாகீர் திருடனை பிடிப்பதற்காக வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கண்காணிப்பு கேமரா(சி.சி.டி.வி.) பொருத்தி இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் திருட வந்தநபர் அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பது தெரியாமல் வழக்கம் போல் திருடி உள்ளார். இந்தநிலையில் வெளியூர் சென்றுவிட்டு சையதுஅபுதாகீர் கடந்த 3-ந்தேதி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் திருடு போயிருந்தது. சையதுஅபுதாகீர் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு மர்மநபர் அடுத்தடுத்து திருடி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சையதுஅபுதாகீர் கண்காணிப்பு கேமரா பதிவை சோதனை செய்து பார்த்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தர்மர் மகன் கணே‌‌ஷ்பிரபு(வயது 20) என்பவர் வீடுபுகுந்து பணம், செல்போன் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. எனவே சையதுஅபுதாகீர் கண்காணிப்பு கேமரா பதிவு ஆதாரத்துடன் பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கணே‌‌ஷ்பிரபு திருடிய பணத்தை செலவழித்து விட்டதாகவும், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கணே‌‌ஷ்பிரபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சையது அபுதாகீர் வீட்டில் திருடிய 2 செல்போன்கள், பவர்பேங்க், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story