நீலகிரி மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்


நீலகிரி மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Jan 2020 4:00 AM IST (Updated: 5 Jan 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவை கோத்தகிரியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

கோத்தகிரி,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உளர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 ஆடி நீள கரும்புத்துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 ஆகியவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் தொடக்க விழா கோத்தகிரியில் நேற்று காலை நடைபெற்றது. கோத்தகிரி பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை கூட்டுறவு ரே‌‌ஷன் கடையில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ஜோதிபாசு, மாவட்ட வளங்கள் அலுவலர் கணே‌‌ஷ், பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் ராதா கிரு‌‌ஷ்ணன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிசாமி வரவேற்றார். தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 407 ரே‌‌ஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 12 ஆயிரத்து 323 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு அட்டை அடிப்படையில் அந்தந்த ரே‌‌ஷன் கடைகளின் மூலமாக வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.25 கோடியாகும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக விடுமுறை நாளான 10-ந் தேதியும் ரே‌‌ஷன் கடைகள் செயல்படும்.

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 16-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகையினை பெற்று கொள்ளலாம்., இந்த பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க மாவட்ட முழுவதும் 6 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை தொலைத்தவர்கள், அவர்களது குடும்ப அட்டையில் பெயர்கள் உள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் தங்களது ஆதார் அட்டையுடன், ரே‌‌ஷன் கடையில் பதிவு செய்து இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவு எண்(ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசை பெற்றதும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வினியோகம் குறித்த புகார்களை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 0423-2441216 என்ற எண்ணிற்கு தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கோத்தகிரி ரே‌‌ஷன் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் 50 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சாந்திராமு எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர் வழங்கி தொடக்கி வைத்தனர்.

இவ்விழாவில் கோத்தகிரி தாசில்தார் மோகனா, செயல் அலுவலர் மணிகண்டன், ரே‌‌ஷன் கடை மேலாளர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சார்பதிவாளர் அய்யனார் நன்றி கூறினார். 

Next Story