சேலத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் - 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


சேலத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் - 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jan 2020 4:15 AM IST (Updated: 6 Jan 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரபீக். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஓட்டலுக்கு வந்தவர்களுக்கு இட்லி, தோசை உள்ளிட்டவை வழங்கினார்.

அப்போது 6 பேர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். அவர்களுக்கு கறி உள்பட பல்வேறு உணவுகளை வழங்கினார். சாப்பிட்ட பின்னர் 6 பேரும் கையை கழுவி விட்டு சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடம் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்குமாறு கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 6 பேரும் சேர்ந்து ரபீக்கை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ரபீக் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியரை தாக்கி விட்டுச்சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story