சிவகிரி அருகே, 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் கசிவுநீர் குட்டை - சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
சிவகிரி அருகே 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் கசிவுநீர் குட்டையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகிரி,
சிவகிரி அருகே சிலுவம்பாளையம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் குட்டை உள்ளது. இதனை கட்ட 1967-ம் ஆண்டு் காமராஜர் ஆட்சி காலத்தின் இறுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின்னர் 2 ஆண்டு்களில் கசிவுநீர் குட்டை கட்டி முடிக்கப்பட்டு் பயன்பாட்டுக்கு வந்தது.
இதைதொடர்ந்து கசிவுநீர் குட்டையில் இருந்து 3 கி.மீ. தூரத்துக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்யும்போது அங்கிருந்து வரும் நீர் கசிவுநீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும். மேலும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் கசிவுநீரும் சேமிக்கப்படும்.
இதன் காரணமாக அவற்றை சுற்றியுள்ள கிணறுகளிலும் தண்ணீர் வற்றாமல் இருந்து வந்தது. நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்பட்டு வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் பாசன காலங்களில் கசிவுநீர் குட்டையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.
ஆனால் அந்த தடுப்பணையை கடந்த 30 ஆண்டுகளாக யாரும் கவனிக்கவில்லை. பராமரிக்கப்படாததால் தடுப்பணை தற்போது சேறும், சகதியும் நிரம்பியும், சீமை கருவேல மரங்களால் சூழ்ந்தும் வெறும் குட்டை போல் காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘இந்த தடுப்பணையை மீண்டும் ஆழப்படுத்தி தூர்வார வேண்டும். மேலும் முட்கள் சூழ்ந்து காணப்படும் வாய்க்கால்களையும் சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை பெய்தால் குறைந்த அளவு தண்ணீரே தடுப்பணையில் தேக்கி வைக்கப்படுகிறது. கசிவுநீர் தடுப்பணையை முறையாக பராமரித்து ஆழப்படுத்தினால் கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்கலாம். விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?’ என்றனர்.
Related Tags :
Next Story