மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தடையை மீறி ஊர்வலம்


மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தடையை மீறி ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Jan 2020 4:30 AM IST (Updated: 6 Jan 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தடையை மீறி ஊர்வலம் நடந்தது.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் சார்பில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட பொருளாளர் பாசித் தலைமை தாங்கினார். நீடூர் வடக்கு தெருவில் தொடங்கிய பேரணி கடைவீதி மற்றும் முக்கிய தெருக்களின் வழியாக சென்று நெய்வாசல் ஜின்னா தெருவை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக நிருபர்களிடம் ஜவாஹிருல்லா கூறிய தாவது:-

தீர்மானம்

மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மாட்டாது என்று கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

அதேபோல வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை மத்திய அரசை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றி அந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டும்.

ஆவணங்கள்

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குடிமக்கள் திருத்த பதிவேட்டை மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். தேசிய 1971-க்கு பிறகு பிறந்த அனைவரும் பிறந்த தேதி, இடம் என அனைத்து தகவலையும் அரசுக்கு கொடுக்க வேண்டும். அதுமட்டும் அல்லாமல் ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மக்களிடம் பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வாக்காளர் பட்டியல் போல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனி மனித உரிமையை, சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

இந்த ஊர்வலத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் அமீது, மனிதநேய மக்கள் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், நிர்வாகிகள் மஜ்கர்தீன், நீடூர் அமீன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீடூர் நெய்வாசல் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி இஸ்லாமியர்கள் ஊர்வலத்தை நடத்தினர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்வலம் நடந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story