பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் செய்யும் பணி மும்முரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 6 Jan 2020 4:00 AM IST (Updated: 6 Jan 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆக்கூர்,

தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை உழைப்பின் உயர்வை எடுத்து கூறும் திருநாளாகும். மண்பாண்டத்தில் தயார் செய்யப்படும் சோறு, குழம்பு ஆரோக்கியத்தை தரும் என்பதால் கிராம பகுதிகளில் பல குடும்பத்தினர் இன்றும் மண்பாண்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். நகர் பகுதிகளில் உலோக பொருட்களின் பயன்பாடு இருந்தாலும் பொங்கல் பண்டிகை அன்று மட்டும் மண்பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம், மேலப்பாதி, கீழையூர், மன்னம்பந்தல், பரசலூர், கருவிழந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மண் பானைகள்

இதுகுறித்து மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயார் செய்யும் பணியில் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறோம்.

பொங்கல் பானைகள் மட்டும் அல்லாது குடம், பூந்தொட்டி, பூச்சாடி, கூஜா, குவளை, உண்டியல், குத்துவிளக்கு, அகல்விளக்கு, மண் குதிரை, கோவில் கும்பாபிஷேகத்திற்கான கலசங்கள், சிரிய கலசங்கள், திருமணத்திற்கான இரட்டை பானைகள், பொம்மைகள், கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கும் தொட்டி மற்றும் பல வகையான அடுப்புகளும் தயார் செய்யப்படுகிறது.

விலை அதிகரிப்பு

நாங்கள் தலைமுறை, தலைமுறையாக மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். களிமண்ணை தண்ணீர் விட்டு நனைத்து குழைத்து அடைந்து வைத்து ஒரு வாரத்திற்கு பின்னர் அந்த மண்ணால் மண்பாண்டங்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் இவற்றில் செம்மண் கலவை பூசி, சூளையில் அடுக்கி சுட்டெடுக்க வேண்டும்.

இதற்கு தேவையான களிமண், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மண்பாண்டங்கள் தயாரிக்க பயன்படும் தேங்காய் மட்டை, வைக்கோல் உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் பலர் இந்த தொழிலை விட்டு, விட்டு மாற்று தொழிலுக்கு செல்கின்றனர்.

ஆனால் சிலர் பாரம்பரியமான இந்த தொழிலை விட முடியாமல் தொடர்ந்து மண்பாண்ட தொழிலை செய்து வருகின்றனர். பலர் வருவாய் குறைந்த இத்தொழிலில் ஈடுபடாததால் மண்பாண்ட தொழில் குறைந்து வருகிறது. எனவே, தமிழக அரசு எங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கினால் மண்பாண்ட தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story