மாநகராட்சி, நகராட்சி தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் அதிக இடம் பெற்று எங்கள் பலத்தை நிரூபிப்போம் - கடலூரில் ஜி.கே.வாசன் பேட்டி
வருகிற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிக இடம் பெற்று எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்று கடலூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
கடலூர்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மக்கள் நம்பிக்கையை பெற்று கணிசமான வாக்குகளை பெற்று அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. சட்டமன்ற தேர்தல் போல் இந்த உள்ளாட்சி தேர்தல் ஆட்சியாளர்களுக்கு நேரடி தேர்தல் அல்ல. ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களை சார்ந்து தான் உள்ளாட்சி தேர்தல் அமையும். அதன் அடிப்படையில் மக்கள் பெருவாரியாக வாக்குகளை அளித்துள்ளார்கள். இருப்பினும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் சின்னம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். ஆனால் உரிய காலக்கெடு இல்லாததால் அதை பெற முடியவில்லை. கடைசி நாள் வரை ஐகோர்ட்டில் போராடினோம். ஆனால் ஐகோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு தோப்பு சின்னத்தை வழங்கியது. இதனால் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற முடியவில்லை.
இருப்பினும் தோப்பு சின்னத்தில் போட்டியிட்ட 28 ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்று உள்ளனர். நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்து இருந்தால் அதிக எண்ணிக்கையில் ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்று இருப்பார்கள். இந்த தேர்தல் அடுத்த கட்ட தேர்தலுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியது பற்றி கேட்கிறீர்கள். தங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பேசி இருக்கலாம். கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவதற்காகவும் அவ்வாறு கூறி இருக்கலாம். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் முழுமையான இடத்தை கேட்டு பெற முடியவில்லை. ஆனால் வருகிற நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை பெற்று, எங்கள் பலத்தை நிரூபிப்போம்.
அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணிக்கு பலம் சேர்ப்போம். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இதில் யாரும் வதந்தியை பரப்பக்கூடாது. இந்தியா ஜனநாயக நாடு, பேச்சுரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால் பேச்சுரிமை வரம்பு மீறி போனால் சட்டம் தன் கடமையை செய்யும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
முன்னதாக கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பேட்டியின்போது மாநில துணை தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் ஞானச்சந்திரன், நெடுஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், நகர தலைவர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story