சங்கரன்கோவில் அருகே, தாய்-மகள் உள்பட 3 பெண்கள் குளத்தில் மூழ்கி பலி - துணி துவைக்க சென்றபோது பரிதாபம்


சங்கரன்கோவில் அருகே, தாய்-மகள் உள்பட 3 பெண்கள் குளத்தில் மூழ்கி பலி - துணி துவைக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 6 Jan 2020 5:15 AM IST (Updated: 6 Jan 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி தாய், மகள் உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

சங்கரன்கோவில், 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகு பொன்னையா (வயது 38), மினி வேன் டிரைவர். அவருடைய மனைவி இந்திரா (34). இவர்களுடைய மகள் சுமித்ராதேவி (13), மகன் மகேந்திரன் (11). சுமித்ராதேவி அருகில் உள்ள ராமநாதபுரம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்தநிலையில் நேற்று காலை இந்திரா தனது மகள் சுமித்ராதேவியுடன் பனையூரில் உள்ள பெரிய குளத்துக்கு துணி துவைக்க சென்றனர். இவர்களுடன் பனையூரை சேர்ந்த முருகானந்தம் மனைவி அனந்தம்மாள் செல்வியும் (31) சென்றார்.

குளத்துக்கு சென்ற இந்திரா, அனந்தம்மாள் செல்வி ஆகியோர் கரையில் அமர்ந்து துணிகளை துவைத்தனர். அப்போது சுமித்ரா தேவி தண்ணீருக்குள் இறங்கி குளிக்க சென்றாள். அவளுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

இதனால் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற சுமித்ராதேவி, தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தாள். அவளின் அபயக்குரல் கேட்டு கரையில் துணி துவைத்து கொண்டிருந்த இந்திரா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், தண்ணீருக்குள் பாய்ந்து மகளை காப்பாற்ற முயன்றார். இதில் இந்திராவும் தண்ணீருக்குள் மூழ்கினார்.

இவர்கள் இருவரையும் காப்பாற்றும் நோக்கில் கரையில் இருந்த அனந்தம்மாள் செல்வியும் குளத்தில் இறங்கினார். ஆனால், அவரால் 2 பேரையும் காப்பாற்ற முடியவில்லை. மாறாக அனந்தம்மாள் செல்வியும் தண்ணீரில் மூழ்கினார். 3 பேரும் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘‘ என்று கூறிக்கொண்டே தண்ணீரில் மூழ்கினார்கள்.

சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். உடனே அவர்கள், குளத்தில் இறங்கி தண்ணீருக்குள் மூழ்கிய 3 பெண்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அனந்தம்மாள் செல்விக்கு 9 வயதில் 1 மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. துணி துவைக்கச்சென்ற 3 பெண்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story