வேலூர் மாவட்டத்தில், 3¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்


வேலூர் மாவட்டத்தில், 3¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:15 PM GMT (Updated: 5 Jan 2020 8:45 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கி தொடங்கி வைத்தார்.

குடியாத்தம்,

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 25 ஆயிரத்து 217 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 707 ரே‌‌ஷன் கடைகளில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 632 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் தொடக்க விழா நேற்று கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கலில் நடைபெற்றது. கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர் முனிராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏழுமலை, கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட தமிழக அரசு பொங்கல் பரிசுதொகுப்பை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுதொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. வருகிற ஆண்டில் கூடுதலாக கொடுக்க வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை மெருகேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமே‌‌ஷ்குமார், கலைச்செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் பலராமன், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story