கோவையில், குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த டிரைவர் கைது - செல்போன் பறிமுதல்


கோவையில், குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த டிரைவர் கைது - செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:15 PM GMT (Updated: 5 Jan 2020 8:45 PM GMT)

குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

குழந்தைகள் மீதான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுக்க குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்க்கவோ, அவற்றை பதிவிறக்கம் செய்யவோ அல்லது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யவோ கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்த 40 பேர் பட்டியலை சென்னை சமூக ஊடக பிரிவு போலீசார் கோவை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதை வைத்து கோவை மாவட்ட சமூக ஊடக பிரிவு போலீசார், வலைத்தளங்களை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் கடையில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரென்டா பாசுமாடரி (வயது 23) என்பவர் குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் (பேஸ்புக்)பதிவேற்றம் செய்ததை கண்டு பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.போலீசார் தொடர்ந்து கண்காணித்தபோது சூலூர் அருகே இருந்து செல்போன் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே செல்போன் ஐ.பி. எண்ணை வைத்து அதற்குரிய நபர் யார் என்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள போதம்பாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (25) என்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து செயல்பட்டு சத்தியமூர்த்தியை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக டிரை வராக வேலை செய்து வந்ததும், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளின் ஆபாச படங்களை விரும்பி பார்ப்பதும், அதை தனது நண்பர்களுக்கு முகநூலில் (பேஸ்புக்) அனுப்பி வைத்ததும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சத்தியமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறியதாவது:-

கைதான சத்தியமூர்த்தியின் செல்போனை சோதனை செய்தபோது அதில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளின் ஆபாச படங்கள் ஏராளமாக இருந்தன. அவர், அந்த படங்களை அடிக்கடி பார்த்து உள்ளார். அவர் யாருக்கு எல்லாம் அனுப்பி வைத்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவோர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஆபாச படங்களை யாரெல்லாம் முகநூலில் பதிவேற்றம் செய்தார்களோ அந்த நபர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story