ராமநாதபுரம் அருகே, முயல்களை வேட்டையாடியவர் கைது
ராமநாதபுரம் அருகே காட்டு முயல்களை வேட்டையாடியவர் பிடிபட்டார்.
ராமநாதபுரம்,
மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் ஏற்பட்ட பருவமாற்றம் காரணமாக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் நீர்நிலைகளை தேடி ராமநாதபுரம் நோக்கி வந்துள்ளன. இந்த பறவைகள் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதால் அதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் நீர்நிலை பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று அதிகாலை ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ்நிர்மல் தலைமையில் வனவர் மதிவாணன், வனக்காப்பாளர்கள் சடையாண்டி, குணசேகர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அச்சுந்தன்வயல் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாக்கு பையுடன் வந்த நபரை மடக்கி பிடிக்க முயன்றனர். வனத்துறையினரை கண்டதும் அந்த நபர் ஓட்டம்பிடித்தார்.
இருப்பினும் வனத்துறையினர் அவரை விடாமல் துரத்தி சென்று ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் மீன்மார்க்கெட் அருகில் வைத்து மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டபோது அதில் 9 காட்டு முயல்கள் உயிருடன் இருந்தன. அதைத்தொடர்ந்து அந்த முயல்களையும், அவற்றை பிடிக்க பயன்படுத்திய பேட்டரியையும் கைப்பற்றிய வனத்துறையினர் இதுதொடர்பாக பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர்.
அதில் ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த புலேந்திரன் மகன் உதயக்குமார்(வயது 29) என்பதும், முயல்களை விற்பனைக்காக வேட்டையாடி கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதன் பின்னர் முயல்கள் மற்றும் பேட்டரி, மோட்டார் சைக்கிளுடன் உதயகுமாரை கைது செய்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
காட்டுமுயல்களை வேட்டையாடிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், பிடிபட்ட முயல்கள் பத்திரமாக காட்டுப் பகுதியில் விடப்படும் என்றும் வனஉயிரின காப்பாளர் அசோக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story