இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் உயிர் பிழைத்தார் - பல்லாரி அருகே இன்ப அதிர்ச்சி
பல்லாரி அருகே இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் உயிர் பிழைத்து குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பல்லாரி,
பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே டவுன் நேரு காலனியில் வசித்து வருபவர் முனி (வயது 32). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் அந்தபகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக தாவணகெரேயில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக இன்னொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவருடைய வயிற்று வலி குணமாகவில்லை. மேலும் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்தால் முனியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து முனியை அவருடைய குடும்பத்தினர் நேற்று முன்தினம் வாகனத்தில் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். மருத்துவமனைக்கு வெளியே வந்த நிலையில் முனி பேச்சு, மூச்சு இன்றி இருந்தார். இதனால் அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர். இதனால் அவர்கள் கதறி அழுதனர்.
மேலும் முனி இறந்ததாக அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு தகவல் அனுப்பினர். இதற்கிடையே, முனியை வாகனத்தில் குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். பல்லாரி மாவட்டம் அகரிபொம்மனஹள்ளி அருகே வந்தபோது திடீரென்று முனி கண்விழித்து பேச தொடங்கினார். இதை பார்த்து குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story