கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் பெங்களூருவில் ஓவிய சந்தை - எடியூரப்பா தொடங்கி வைத்தார்


கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் பெங்களூருவில் ஓவிய சந்தை - எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Jan 2020 5:15 AM IST (Updated: 6 Jan 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் ஓவிய சந்தையை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் ஓவிய சந்தை தொடக்க விழா பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள சித்ரகலா பரிஷத் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, ஓவிய சந்தையை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்த ஓவிய சந்தை, மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. வெளிநாட்டு கலைஞர்களையும் இது கவருகிறது. அதனால் இந்த ஓவிய சந்தையை மேலும் சிறப்பாக நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஓவிய சந்தை ஏற்பாட்டு பணிகளுக்கு மாநில அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கும். ேதவையான உதவிகளை அரசு செய்ய தயாராக உள்ளது.

குமரகிருபா சாலையின் இருபுறத்திலும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. இந்த கண்காட்சியை பார்ப்பது மட்டுமின்றி இங்கு வருபவர்கள் ஓவியங்களை வாங்கி சென்றால், அது கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த ஓவிய சந்தையை விவசாயிகளுக்கு அர்ப்பணித்து இருப்பது பாராட்டுக்குரியது. கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையை கலைஞர்கள் தங்களின் கைவண்ணத்தில் அற்புதமான முறையில் ஓவியம் வரைந்துள்ளனர். இது நாட்டிலேயே அரிய ஓவிய சந்தையாகும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த விழாவில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பி.சி.மோகன் எம்.பி., ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். எடியூரப்பா பேட்டரி காரில் வலம் வந்து, ஓவிய சந்தையில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களை பார்த்து மகிழ்ந்தார்.

இந்த ஓவிய சந்தையில் சுமார் 1,500 ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் ஓவியங்களை விற்பனை செய்தனர். கலைஞர்கள் அதே இடத்தில் ஓவியங்களை வரைந்து கொடுத்து அசத்தினர். இந்த ஓவிய கண்காட்சியை காண ஏராளமானவர்கள் வந்திருந்தனர். பொதுமக்கள் குவிந்ததால், ஓவிய சந்தை திருவிழா போல் காட்சியளித்தது. இந்த ஓவிய சந்தையையொட்டி குமரகிருபா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

100 ரூபாயில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரைக்கும் ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டன. கர்நாடகம், தமிழ்நாடு உள்பட நாட்டின் 18 மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கலந்து கொண்டனர். அந்த கலைஞர் களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன. ரூ.3 கோடிக்கு ஓவியங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சித்ரகலா பரிஷத் நுண்கலை கல்லூரி மாணவர்கள், பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஓவிய சந்தை, இரவு 8 மணிக்கு நிறைவடைந் தது.

Next Story