ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா கடத்திய சம்பவங்களில் 102 பேர் கைது - துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ேபாதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
காட்பாடி,
ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் காட்பாடி காந்திநகரில் இயங்கி வருகிறது. இப்பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டாக ஏ.டி.ராமச்சந்திரன் உள்ளார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்கவும், விற்பவர்களை பிடிக்கவும் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு பள்ளி, கல்லூரி, ரெயில்நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மேலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மாவட்ட எல்லை மற்றும் முக்கிய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
இந்த வாகன தணிக்கை மற்றும் ரகசிய தகவலின் பேரில் கடந்தாண்டு கஞ்சா கடத்தியது தொடர்பாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 102 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் ஆவர். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த சூரியபிரகாஷ், திருப்பத்தூரை அடுத்த பொம்மிகுப்பம் விஜயகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான 275 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி பிடிப்பட்டது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரெயில்கள் மற்றும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வேலூர் மற்றும் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன் கூறினார்.
Related Tags :
Next Story