நெல்லையுடன் அடைச்சாணியை மீண்டும் சேர்க்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம்
நெல்லை மாவட்டத்துடன் அடைச்சாணியை மீண்டும் சேர்க்கக்கோரி, அந்த கிராம மக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை,
நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டபோது அம்பை தாலுகா ஆழ்வார்குறிச்சி குறுவட்டம் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதற்கு அந்த குறுவட்டத்தை சேர்ந்த இடைகால், பள்ளக்கால், பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம், அடைச்சாணி உள்ளிட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அடைச்சாணியை தவிர மற்ற கிராமங்களை நெல்லை மாவட்டம் அம்பை தாலுகாவில் சேர்த்து அரசு அறிவித்தது. இதனால் அடைச்சாணி கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் தங்கள் பகுதியை மீண்டும் நெல்லை மாவட்டத்தில் சேர்க்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று அடைச்சாணியில் திடீரென கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். யாரும் வேலைக்கு செல்லவில்லை.
மாணவர்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பு மக்களும் அங்குள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், கடையம் யூனியன் ஆணையாளர் முருகையா சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவதாக உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று காலை முதல் மாலை வரை போராட்டம் நடந்தது.
அடைச்சாணி கிராம மக்களும் இன்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்து உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அடைச்சாணி பஞ்சாயத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்கள் ஊர் அம்பையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முன்பு நெல்லை மாவட்டம் அம்பை தாலுகாவில் இருந்தது. நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கியபோது எங்கள் பஞ்சாயத்தை அம்பை தாலுகாவில் இருந்து பிரித்து தென்காசி தாலுகாவில் சேர்த்து விட்டனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
இதேபோல் அருகில் உள்ள பள்ளக்கால், பனஞ்சாடி, இடைகால், ரெங்கசமுத்திரம் ஆகிய கிராம மக்களும் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, அந்த கிராமங்களை தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரித்து மீண்டும் நெல்லை மாவட்டத்துடன் சேர்த்து விட்டனர். அதேபோல் அடைச்சாணி பஞ்சாயத்தையும் மீண்டும் நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். மேலும் கடையம் யூனியனில் உள்ள அடைச்சாணியை பாப்பாக்குடி அல்லது அம்பை யூனியனில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story