பா.ஜனதாவில் இருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் விலக தயார்; குமாரசாமி பரபரப்பு பேட்டி


பா.ஜனதாவில் இருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் விலக தயார்; குமாரசாமி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2020 5:30 AM IST (Updated: 6 Jan 2020 11:15 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவில் இருந்து விலக 20 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகவும் கஷ்டப்பட்டு எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரி ஆகியுள்ளார். அவர் முதல்-மந்திரியானது எனக்கு மகிழ்ச்சி தான். எடியூரப்பா அரசுக்கு இடையூறு செய்வேன் என்று நான் எங்கும் சொல்லவில்லை. இப்போது கூட சிலர் என்னிடம் வந்து, பா.ஜனதாவில் இருந்து 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியை விட்டு விலக தயாராக இருக்கிறார்கள். அவர்களை இழுப்பதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

நான் எதற்காக சேற்றில் சிக்க வேண்டும்?. எடியூரப்பா செய்தது போல் ஒரு பொறுப்பான அரசை கவிழ்க்க நான் முயற்சி செய்ய மாட்டேன். என்னை பொறுத்தவரையில் கர்நாடகத்தின் வளர்ச்சி தான் முக்கியம். ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல. இதை புரிந்து கொண்டு எடியூரப்பா பணியாற்ற வேண்டும்.

‘ராஜாஹுலி’ (ராஜாபுலி) என்று அழைக்கப்படும் எடியூரப்பா, பிரதமர் முன்பு எலியை போல் அடங்கிவிடுகிறார். இந்த அரசை கவிழ்க்க நானாக முயற்சி செய்ய மாட்டேன். சிறிது காலம் எடியூரப்பா இருக்கட்டும். மக்களுக்கு நல்லது செய்யும் பணியை ஆற்றட்டும். அரசியலில் இருந்து ஓய்வுபெறும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை.

அரசியல் வைராக்கியமும் எனக்கு இல்லை. மக்களின் அன்பு கிடைக்கும்வரை அரசியலில் நீடிப்பேன். சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு எங்கள் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்ட உள்ளேன். அதில் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம். பிரதமராக மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதை விட்டுவிட்டு, தேவை இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். உலகில் ஆதங்கமான சூழல் நிலவுகிறது.

3-வது உலகப்போர் நடைபெறும் என்ற பீதி ஏற்பட்டு உள்ளது. இந்திய பிரதமரும், அமெரிக்க அதிபரும் ஒரே படகில் மிதக்கிறார்கள். மத்திய அரசின் தவறான முடிவுகளால் பன்னாட்டு தொழில் முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க தயங்குகிறார்கள். நமக்கு இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை முக்கியமல்ல. நாட்டின் பொருளாதார நிலை சீரடைய வேண்டும். அது தான் நமக்கு முக்கியம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story