நாங்குநேரி அருகே, ஆம்னி பஸ் மோதி, ஆம்புலன்ஸ் டிரைவர் சாவு - மனைவி கண் முன்னே பரிதாபம்


நாங்குநேரி அருகே, ஆம்னி பஸ் மோதி, ஆம்புலன்ஸ் டிரைவர் சாவு - மனைவி கண் முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 7 Jan 2020 4:30 AM IST (Updated: 7 Jan 2020 12:12 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே ஆம்னி பஸ் மோதி, ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாங்குநேரி, 

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த முருகன் மகன் துரை (வயது 36). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு சுதன் (12), ரோகித் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன்களை வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் கொண்டு விட்டுவிட்டு, பின்னர் இரவில் ஆம்புலன்சில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆம்புலன்சை துரை ஓட்டினார்.

நாங்குநேரி அருகே வந்தபோது ஆம்புலன்சில் திடீரென விளக்கு எரியவில்லை. இதனால் துரை ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்திவிட்டு, பழுதை சரிசெய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக துரை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தனது கண் முன்னே கணவர் பிணமாக கிடந்ததை பார்த்து இந்திரா கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆம்னி பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆம்னி பஸ் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story