தனியாக விட்டுச் சென்றதால் விபரீதம்: உள் அலங்கார உபகரணங்கள் சரிந்து விழுந்து 2½ வயது பெண் குழந்தை சாவு
தனியாக விட்டுச் சென்றபோது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2½ வயது பெண் குழந்தை உள்அலங்கார உபகரணங்கள் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
பாகூர்,
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளவயதன் (வயது 40). இவர் சுப நிகழ்ச்சிகளுக்கு வீடுகள் மற்றும் திருமண மண்டபங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 35). தவளக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2½ வயதில் தனனியா என்ற பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இளவயதன் நேற்று வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டார். இவருடைய மனைவி முத்துலட்சுமியும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவர்களின் 2 குழந்தைகளையும் இளவயதனின் தாயார் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இளவயதனின் தாயார் 8 மாத ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துணவை வாங்க அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றுவிட்டார்.
பெண் குழந்தை தனனியா மட்டும் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது உள்அலங்கார உபகரணங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்று விட்டாள். அங்கிருந்த உபகரணம் ஒன்றை இழுத்தபோது மர பலகைகள், இரும்புச்சட்டங்கள் சரிந்து தனனியா மீது விழுந்து அமுக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவள் மயங்கினாள்.
அங்கன்வாடி மையத்தில் இருந்து வீடு திரும்பிய தனனியாவின் பாட்டி, உள் அலங்கார உபகரணங்கள் சரிந்து விழுந்து அமுக்கியதில் குழந்தை நசுங்கி கிடப்பது கண்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
உடனே குழந்தை தனனியாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர் பரிசோதித்து விட்டு அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் தனியாக விட்டுச் சென்ற போது அலங்கார உபகரணங்கள் விழுந்து அமுக்கியதில் 2½ வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story