6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ‘ரேஷன் கடையை திறக்காவிட்டால் பொங்கல் பரிசை வாங்கமாட்டோம்’ - கலெக்டரிடம், இளைஞர்கள் மனு


6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ‘ரேஷன் கடையை திறக்காவிட்டால் பொங்கல் பரிசை வாங்கமாட்டோம்’ - கலெக்டரிடம், இளைஞர்கள் மனு
x
தினத்தந்தி 7 Jan 2020 3:45 AM IST (Updated: 7 Jan 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கட்டப்பட்டு 6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் புறக்கணிப்போம் என்று கலெக்டரிடம், இளைஞர்கள் மனு கொடுத்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை தரைத்தளத்திற்கு வந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பல்வேறு குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். மக்கள் அளித்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி சுப்பன்தெரு ராகவன் காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கான ரேஷன் கடை 1½ கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதுவரை அந்த ரேஷன் கடை திறக்கப்படவில்லை. எங்கள் பகுதி மக்களுக்கு பொங்கல் பரிசாக இந்த ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திறக்கவில்லை என்றால் பொங்கல் பரிசு தொகுப்பை எங்கள் பகுதி மக்கள் வாங்காமல் புறக்கணிக்க உள்ளோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்ததையடுத்து அந்த இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் தேனி அருகே உள்ள பூதிப்புரம், வாழையாத்துப்பட்டியை சேர்ந்த மக்கள் 18 பேர் கலெக்டரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள், தங்களுக்கு சொந்த வீடு இல்லை என்றும், தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் தங்களின் மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில், “கடந்த 1-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், ஜெயமங்கலம் காந்திநகரை சேர்ந்த இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை தேடினால் பரவாயில்லை. ஆனால் போலீசார் அடாவடி செய்கின்றனர். எங்கள் ஊரில் உள்ள ஆண்கள் அனைவரையும் போலீசார் விரட்டுகின்றனர். இதனால், ஊரில் ஒரு ஆண் நபரும் இல்லை. பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. தொழில், வியாபாரம், விவசாயம் நஷ்டத்தை கண்டு வருகிறது. வழக்கில் சம்பந்தம் இல்லாத நபர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஊரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story