ரேஷன் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
மானாமதுரையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
மானாமதுரை,
மானாமதுரையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 வழங்கும் விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானா மதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சின்னைமாரியப்பன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் பாஸ்கரன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கினார்.
அதன் அடிப்படையில் தமிழா்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்புடன் கொண்டாடும் வகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் ரேஷன்அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரிப்பருப்பு, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு ஆகியவற்றுடன் தலா ரூ.1,000 என ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை தற்போதைய முதல்-அமைச்சரும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இ்வ்வாறு அவர் பேசினார்.
மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் பேசும்போது, அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். மக்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசுக்கு நிகர் யாரும் இல்லை என்றார். மேலும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகையில் இருந்து பெற்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story