மாவட்ட செய்திகள்

தேனியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் படமெடுத்து ஆடிய பாம்பு - உயிர் பிழைக்க கீழே குதித்த கூரியர் ஊழியர் படுகாயம் + "||" + In Theni, On a motorcycle that runs Snake filming season

தேனியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் படமெடுத்து ஆடிய பாம்பு - உயிர் பிழைக்க கீழே குதித்த கூரியர் ஊழியர் படுகாயம்

தேனியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் படமெடுத்து ஆடிய பாம்பு - உயிர் பிழைக்க கீழே குதித்த கூரியர் ஊழியர் படுகாயம்
தேனியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் கருநாகபாம்பு படமெடுத்து ஆடியது. அதை பார்த்து உயிர் பிழைக்க கீழே குதித்த கூரியர் ஊழியர் படுகாயம் அடைந்தார்.
தேனி,

தேனி அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் பிரகா‌‌ஷ் (வயது 37). இவர் ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தேனி அருகே உள்ள அன்னஞ்சி விலக்கில் இருந்து தேனி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அன்னஞ்சி விலக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பூங்காவை தாண்டி வந்த போது, அவருடைய மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கின் மேல் ஒரு கருநாக பாம்பு ஏறி நின்றது. அதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து, பாம்பிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்தார். மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த ஒரு சுவரில் மோதி கவிழ்ந்தது

பாம்பிடம் இருந்து உயிர் பிழைக்க கீழே குதித்த பிரகா‌‌ஷ் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அந்த பாம்பு மோட்டார் சைக்கிளில் இருந்து அகலவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மோட்டார் சைக்கிளுக்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட கருநாக பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் விடப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், ‘மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தபோது பாம்பு அதற்குள் புகுந்து இருக்கும். சாலையில் ஓட்டிச் சென்ற போது, மெதுவாக மேலே ஏறி பெட்ரோல் டேங்கிற்கு வந்துள்ளது’ என்றனர்.

தேனியில் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோன்று, தேனி வாரச்சந்தை முன்பு விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் இருந்து நல்லபாம்பு வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.