பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடுக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 50 பேர் மீட்பு


பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடுக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 50 பேர் மீட்பு
x
தினத்தந்தி 8 Jan 2020 12:03 AM GMT (Updated: 8 Jan 2020 12:03 AM GMT)

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் தத்தளித்த 50 பேரை மீனவர்கள் மீட்டனர்.

மும்பை, 

மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து சம்பவத்தன்று பிறந்தநாள் கொண்டாட ஒரு குழுவினர் படகில் சென்றனர். இந்த படகில் ஏறி அமர்ந்த 50 பேர் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது படகு கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து 1.5 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென படகு நின்று கொண்டது.

இதுபற்றி அறிந்த படகில் இருந்தவர்கள் விசாரித்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டதாகவும் அந்த கோளாறை சரிபார்த்து வருவதாக படகில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் திடீரென படகில் தண்ணீர் புகுந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த படகில் இருந்தவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். அப்போது கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் படகை அங்கு விரைவாக செலுத்தினர்.

மேலும் தண்ணீரில் மூழ்கும் படகில் சிக்கிய 50 பேரையும் மீட்டு தங்கள் படகில் ஏற்றி கொண்டனர். இதையடுத்து மீனவர்கள் அவர்களை கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மும்பை துறைமுக அதிகாரிகள் மற்றும் மராட்டிய கடலோர காவல் படையினர் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story