டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த மாணவர்களின் தொடர் போராட்டம் வாபஸ்


டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த மாணவர்களின் தொடர் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 8 Jan 2020 5:56 AM IST (Updated: 8 Jan 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் நடந்த தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மும்பை,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்களும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கு எடுத்தனர்.

மாணவர்களின் போராட்டத்தையொட்டி கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஓட்டல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்காக மாநகராட்சி சார்பில் கழிவறை வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இந்தநிலையில் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி போலீசார் மாணவர்களை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து கலைந்து சென்று ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்துமாறு கூறினர்.

எனினும் மாணவர்களில் சிலர் அங்கு இருந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக வேன்களில் ஏற்றி ஆசாத் மைதானத்தில் இறக்கி விட்டனர்.

இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதன் மூலம் மாணவர்கள் நடத்திய 3 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் சங்ராம்சிங் நிசாந்தர் கூறும்போது, ‘‘மாணவர்களின் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனவே இடத்தை மாற்றிக்கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் கேட்டு கொண்டோம். ஆனால் சில குழுவினர் அதை கேட்கவில்லை. எனவே அவர்கள் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ஆசாத் மைதானத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் அங்கு சென்றவுடன் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்’’ என்றார்.

இந்த நிலையில், டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று மாலை சர்ச்கேட் ரெயில் நிலையம் அருகே முல்புத் அதிகார் சங்கர்ஸ் சமிதி என்ற அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story