சேலத்தில் நள்ளிரவில், விமான நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதாக பரபரப்பு


சேலத்தில் நள்ளிரவில், விமான நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதாக பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jan 2020 4:30 AM IST (Updated: 8 Jan 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை அழைத்து சென்றவர்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரை கடத்தியதாக கூறப்படுபவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகள் டிம்பிள் (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலம், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வாலிபர்களிடம் பல லட்ச ரூபாய் வரை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்த வாலிபர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தநிலையில் அந்த வாலிபர்களிடம் நேற்று சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டில் வைத்து பணம் தருவதாக டிம்பிள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதை நம்பி 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சேலம் வந்தனர். பின்னர் அவர்களிடம் டிம்பிள் குடும்பத்தினர், தஞ்சாவூரில் பணம் இருப்பதாக கூறியதால் டிம்பிள், அவருடைய தந்தை காளிமுத்து மற்றும் உறவினர் ஒருவரை வாலிபர்கள் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே டிம்பிளின் தாயார், இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது கணவர் மற்றும் மகளை வாலிபர்கள் சிலர் காரில் கடத்தி சென்றதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபற்றி வாலிபர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் நேற்று நள்ளிரவில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அந்த பெண்ணை அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி, இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் டிம்பிள் மற்றும் அவருடைய பெற்றோரை போலீசார் விசாரணைக்காக அன்னதானப் பட்டி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவரை அழைத்து சென்ற வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் வாலிபர்கள் கூறும் போது, ‘தனியார் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் டிம்பிள் பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இன்று(நேற்று) அவர் பணம் தருவதாக கூறியதால் நாங்கள் சேலம் வந்தோம். பின்னர் தஞ்சாவூரில் பணம் இருப்பதாக கூறியதால் அவரை காரில் அழைத்து சென்றோமே தவிர கடத்தவில்லை. மேலும் அவரிடம் நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்றனர்.

அதே நேரத்தில் டிம்பிள் இந்த குற்றச்சாட்டை போலீசார் விசாரணையின் போது மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், தனக்கு தெரிந்த ஒருவரிடம் அந்த வாலிபர்களை அறிமுகம் செய்து வைத்தேன், அவர் தான் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி இருக்கலாம். அவரிடம் பணத்தை பெற்றுத்தர நானும் உறுதுணையாக இருக்கிறேன் என்று போலீசாரிடம் அந்த பெண் கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story