ஆற்காடு அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற நரிக்குறவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து கட்டிட மேஸ்திரி படுகாயம்
ஆற்காடு அருகே முன்னால் வாகனத்தில் சென்ற நரிக்குறவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து கட்டிட மேஸ்திரி படுகாயம் அடைந்தார்.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38), கட்டிட மேஸ்திரி. அவருடைய மனைவி ராதிகா (32). இவர், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை சண்முகம் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வந்து தாஜ்புரா கூட்ரோட்டில் விட்டு விட்டு மீண்டும் சாத்தூர் நோக்கி சென்றார். அப்போது சண்முகத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியை சேர்ந்த நரிக்குறவரான முரளி (30) என்பவர் வேட்டைக்கு செல்வதற்காக நாட்டு துப்பாக்கியை தோளில் மாட்டியபடி சென்றுள்ளார்.
களர் கிராமம் அருகே முரளி சென்ற மோட்டார் சைக்கிள் சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது அவர் தோளில் மாட்டியிருந்த நாட்டு துப்பாக்கி கீழே விழுந்து திடீரென வெடித்தது. அந்த சமயத்தில் சாலையில் பின்னால் வந்த சண்முகத்தின் மீது துப்பாக்கி குண்டுகள் கழுத்து மற்றும் காலில் பாய்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் முரளி அங்கிருந்து தப்பி ஓடிவிடிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய முரளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story