மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - 70 பெண்கள் உள்பட 1,150 பேர் கைது


மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - 70 பெண்கள் உள்பட 1,150 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2020 10:30 PM GMT (Updated: 8 Jan 2020 3:20 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 70 பெண்கள் உள்பட 1,150 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை நியமன தடை சட்டத்தை ரத்து செய்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய பாதுகாப்பு நிதியம் உருவாக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்யப்போவதாக எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

அதன்படி, நேற்று திருவண்ணாமலையில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மேலும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். மாநில பேரவை செயலாளர் க.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சில் செயலாளர் நாகராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முத்தையன், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிவராமன், சி.பி.எம். மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற போதிலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த சாலை மறியலில் 70 பெண்கள் உள்பட 1,150 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் இந்தியன் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேசன் வங்கி, டி.எம்.பி. வங்கி உள்பட பல்வேறு வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. வங்கி சேவைகள் நடைபெறாததால் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முன்னதாக திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வங்கிகள் இணைப்பால் கிளைகள் மூடப்படும் நிலை உள்ளது. எனவே, வங்கிகள் இணைப்பு கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொது செயலாளர் கணபதி, இணை செயலாளர் கணபதி, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாகு, செயலாளர் பிரபு, திருவண்ணாமலை மாவட்ட நகை மதிப்பீட்டாளர் சங்க செயலாளர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story