தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பதப்படுத்த புதிய தொழில்நுட்பம்; மைசூரு மத்திய உணவு ஆய்வு மையம் உருவாக்கியது


தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பதப்படுத்த புதிய தொழில்நுட்பம்; மைசூரு மத்திய உணவு ஆய்வு மையம் உருவாக்கியது
x
தினத்தந்தி 9 Jan 2020 4:30 AM IST (Updated: 8 Jan 2020 10:21 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பதப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை மைசூரு மத்திய உணவு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் உருவாக்கி உள்ளது.

மைசூரு, 

மைசூருவில் மத்திய உணவு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையம், தக்காளி உள்ளிட்ட விரைவில் அழுகக்கூடிய விவசாய விளை பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கி உள்ளது. இதுதொடர்பாக இந்த ஆய்வு மையத்தின் உணவு பார்சல் பிரிவு அதிகாரி சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தக்காளி உள்ளிட்ட விரைவில் அழுகக்கூடிய விவசாய விளை பொருட்களின் விலை தினந்தோறும் மாறுபட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளி உள்ளிட்ட பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்கும்போது சில நேரம் லாபம் கிடைக்கிறது. ஆனால் பல நேரங்களில் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

இதற்கு காரணம் தக்காளி உள்ளிட்ட சில விளை பொருட்கள் விரைவில் அழுகிவிடும். அதனால் அவற்றை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்று விவசாயிகள் எண்ணுவதுதான். விவசாயிகளின் நெருக்கடியை அறிந்து கொண்டு தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் மிகக்குறைந்த விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள்.

இதற்கு காரணம் அவர்களால் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை பதப்படுத்தி வைக்க இயலாததுதான். அதனால் விவசாயிகளின் நலன் கருதி மத்திய உணவு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விலை உயர்ந்த எந்திரமோ, குளிர்சாதன பெட்டியோ தேவையில்லை. அதிக செலவும் ஆகாது. ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரில் அழுகக்கூடிய காய்கறிகளை போட்டு அதில் 4 சதவீதம் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் காய்கறிகள் உடனடியாக அழுகி விடாது. அவைகள் பழுத்து அழுகுவதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களோ எடுத்துக் கொள்ளும்.

இதுமட்டுமல்லாமல் சில காய்கறிகளை குறிப்பிட்ட அளவு வெப்பமூட்டப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து வைத்துக் கொள்வதன் மூலமும் அவைகள் உடனடியாக அழுகுவதை தடுக்க முடியும்.

இதன்மூலம் விவசாயிகள் காய்கறிகளை பதப்படுத்தி வைத்து சரியான நேரத்தில் விற்பனை செய்ய முடியும். இதன்மூலம் தக்காளி உள்ளிட்ட அழுகக்கூடிய காய்கறிகளுக்கு நிலையான விலையும், விவசாயிகள் லாபமும் பெற முடியும். தட்டுப்பாடும் அதிகம் ஏற்படாது.

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story