கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்தால் சிறைதண்டனை - கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை


கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்தால் சிறைதண்டனை - கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2020 10:30 PM GMT (Updated: 8 Jan 2020 5:54 PM GMT)

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல், 

கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 11 ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்திட கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உதவி அமலாக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கைத்தறிக்கென பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, கரை மற்றும் முந்தியுடன் கூடிய துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின் படி தண்டனைக்கு உரிய செயலாகும்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா? என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும்.

பின்னர் தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் வழங்கப்படும். எனவே நாமக்கல் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story