மாவட்டம் முழுவதும், 17 இடங்களில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 1,993 பேர் கைது
மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 1,993 பேர் கைது செய்யப்பட்டனர். பஸ்கள், ஆட்டோக்கள் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
திண்டுக்கல்,
விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் நலசட்டங்களில் திருத்தம் செய்ததை வாபஸ் பெற வேண்டும். ரெயில்வே, வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு தொ.மு.ச. தொழிற்சங்க மாநில தலைவர் பசீர் அகமது தலைமையில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டனர்.
பின்னர் தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே அங்கு வந்த திண்டுக்கல் வடக்கு போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வருவாய்த்துறை அலுவலர்கள், தபால் அலுவலக ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் நேற்று மூடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் தேசிய மயமாக்கப்பட்ட சில வங்கிகள் தவிர மற்ற வங்கிகள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன. 20 முதல் 30 சதவீதம் வரையே ஊழியர்கள் பணிக்கு வந்தனர். மற்றவர்கள் வரவில்லை. ஆனாலும் வங்கி பணிகள் பாதிக்கப்படவில்லை.
இதுமட்டுமின்றி பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. ஓட்டல்கள், டீக்கடைகள் என அனைத்தும் திறந்திருந்தன. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
இதுதவிர திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நகர தொழிற்சங்கங்களின் இணைப்புக்குழு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இணைப்பு குழுவின் மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிலக்கோட்டை நால்ரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகி சாதிக்அலி, விவசாய தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன் உள்பட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சிலம்பரசன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நத்தத்தில் தேசியமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 70 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் ஆத்துமேட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையிலும், ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 110 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். சின்னாளபட்டியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 1,993 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 610 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story