மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Jan 2020 3:45 AM IST (Updated: 9 Jan 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து, கும்மிடிப்பூண்டி, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் பேரணி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் நேற்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரணி மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

ஏ.ஐ.சி.சி.டியூ.வின் மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு, நிர்வாகிகள் துளசி நாராயணன், கோபால், அர்ச்சுணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து பேரணியாக வந்த தொழிற்சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள தபால் நிலையம் முன்பு ஜி.என்.டி. சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனை தனியாருக்கு விற்க அனுமதிப்பதை கண்டித்து நேற்று பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் ஆலையின் முன்பு தொழிற்சங்க அமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மோசஸ் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் பத்ருடூ, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பை சர்ச் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சி.ஐ.டி.யூ.டி.ஓய்.எப்.ஐ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக புறப்பட்டனர்.

மேலும் அவர்கள், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை மணிமங்கலம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து நேற்று கூடுவாஞ்சேரியில் பஸ்நிலையத்தில் இருந்து ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில துணை தலைவர் இரணியப்பன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் சென்று ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுமார் 75-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Next Story