திருச்சி திறந்தவெளி சிறையில் 1¼ ஏக்கரில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள் அறுவடை


திருச்சி திறந்தவெளி சிறையில் 1¼ ஏக்கரில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள் அறுவடை
x
தினத்தந்தி 9 Jan 2020 3:45 AM IST (Updated: 9 Jan 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி திறந்தவெளி சிறையில் 1¼ ஏக்கரில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள் நேற்று அறுவடை செய்யப்பட்டது.

திருச்சி, 

திருச்சி-புதுக்கோட்டை ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகள் 600 பேர் இருக்கிறார்கள். அவர்களின் நன்னடத்தை அடிப்படையில், கைதிகளை தேர்வு செய்து பல்வேறு தொழில்கள் சிறையில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. திருச்சி மத்திய சிறையில் உள்ள திறந்த வெளியில் அட்டை தயாரிக்கும் தொழில், புக் பைண்டிங், ஆடு-மாடுகள் வளர்த்தல், விவசாயம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தண்டனை கைதிகளை கொண்டு செயல்படுத்தப்பட்டு, அந்த கைதிகளுக்கு உரிய சம்பளமும் சிறைத்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள திறந்த வெளியில் சிறைத்தோட்டம் 2-ல் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1¼ ஏக்கர் நிலத்தில், கடந்த 8 மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தண்டனை கைதிகளை கொண்டு செங்கரும்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது அவை வளர்ந்து பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாராகி இருந்தது. இந்த நிலையில் நேற்று சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், மத்திய சிறைக்கண்காணிப்பாளர் சங்கர், சிறை அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் சிறை வார்டர்கள் முன்னிலையில் விளைந்த செங்கரும்புகளை கைதிகள் அறுவடை செய்தனர். பின்னர் அவை 2 அடி நீள கரும்புகளாக துண்டு, துண்டாக வெட்டப்பட்டன.

இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மத்திய சிறை 252 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இவற்றில் 52 ஏக்கரில் கட்டிடமும், 200 ஏக்கரில் திறந்த வெளி தோட்டமாக விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. திறந்தவெளி தோட்டத்தில் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை தேர்வு செய்து விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. சின்ன வெங்காயம், கத்தரி, வெண்டை, புடலை, மரவள்ளி கிழங்கு, அவரை, தக்காளி பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. 2½ ஏக்கரில் வனத்தோட்டம் அமைக்கப்பட்டு 800 மாமரங்கள், 110 முந்திரி செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் சேகரிப்பு குட்டையில் மீன்பண்ணை உருவாக்கப்பட்டு அதில் 4,500 மீன்குஞ்சுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவை சிறைச்சந்தை மூலம் விற்கப்படும். விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் தொகையில் 40 சதவீதம் சிறை நல பராமரிப்புக்கும், 40 சதவீதம் நிர்வாக செலவினங்களுக்கும், 20 சதவீதம் கைதிகளுக்கு சம்பளமாகவும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டும் செங்கரும்பு பயிரிட்டிருந்தோம். அதுபோல இந்த ஆண்டு 1¼ ஏக்கர் நிலத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் எண்ணிக்கையிலான செங்கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வருகிற தைப்பொங்கலையொட்டி அரசால் ரே‌‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் 2 அடி நீளமுள்ள கரும்பாக வினியோகிக்கப்பட உள்ளன. 6 அடி நீள கரும்பை ரூ.21-க்கு அரசே விலை கொடுத்து வாங்குகிறது.

தற்போது அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் பிப்ரவரி மாதம் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரங்களை இட்டு மீண்டும் கரும்பு சாகுபடி செய்யப்பட இருக்கிறது.

வறட்சி காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடின்றி பராமரிக்கும் வகையில் சிறையில் மழைகாலத்தில் பெய்யும் மழைநீரை சேகரிக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. இங்கு 80 சதவீதம் இயற்கை முறையில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை சிறைவாசிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிறைச்சந்தை மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்களை பொதுமக்களுக்கும் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். கூடுதலாக வாழை, தென்னை, எள், பாசிப்பயறு, உளுந்தம் பயறு, துவரை போன்றவையும் பயிரிட்டு இருக்கிறோம். இன்னும் 20 நாட்களில் ½ ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராக இருக்கிறது. கேரட், பீட்ரூட் பயிர் சாகுபடியும் செய்துள்ளோம். அது நல்ல முறையில் விளைந்தால் அதிகமாக பயிரிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறைத்தோட்டத்தில் நல்ல பணியில் உள்ள சிறைவாசிகள் தற்போது வெளிப்பணிக்குழுவிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு தற்போது அனைத்து மத்திய சிறைகளிலும் திறந்தவெளி தோட்டம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. திறந்தவெளி தோட்டத்தில் ஒருநாள் தண்டனை கைதி வேலை செய்தால், அவர்களின் தண்டனையில் இருந்து ஒருநாள் கழிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story